Labels:

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உயர் நீதி மன்ற தீர்பை வரவேற்கின்றது.மற்றும் உடனடியாக சமசீர் கல்வியை தடையின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கிறது .


சென்னை: தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டுக்கு தமிழக அரசு ஒத்திவைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணையும் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் தனது தீர்ப்பை அறிவித்தது.



தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:


- நடப்பு ஆண்டிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டும்.

- 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

- சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக அரசு கருதினால் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் அதைக் களைய நடவடிக்கை எடுக்கலாம்.

- சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.

- தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செய்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

வழக்கின் பின்னணி:

தமிழகத்தில் மாநில அரசு பாடத் திட்டம், மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என நான்கு பாடத் திட்ட முறைகள் செயல்பட்டு வந்தன. இவற்றை ஒருங்கிணைத்து அனைவருக்கும் சமச்சீரான கல்வித் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக குழு அமைத்து ஆராயப்பட்டது. அதன் இறுதியில், சமச்சீர் கல்வித் திட்டத்தை திமுக அரசு அறிமுகம் செய்தது.

தொடக்கத்தில் 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இது அறிமுகமானது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும், அதாவது 10ம் வகுப்பு வரை இத்திட்டத்தை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சி அமைந்ததும், திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி அதை நடப்பு ஆண்டில் நடைமுறைப்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.

இந்த சட்ட திருத்தத்திற்குத்தான் தற்போது உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்ட குழப்பம் காரணமாக ஜூலை 1ம் தேதி முதல் செயல்பட வேண்டிய பள்ளிகள் திறப்பு 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் பள்ளிகள் திறகப்பட்டபோதிலும், பாடப் புத்தகம் எதையும் வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை காரணமாக புத்தகம் இல்லாமல் மாணவ, மாணவியர் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். தற்போது அதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக உயர் நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த முன் வர வேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சமசீர் கல்வி புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்ய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுமெனவும் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா தமிழக அரசினை கேட்டு கொள்கிறது.

0 comments :

Post a Comment