Labels:

சர்வ சிக்ஷ அபியான் ஊழல்




இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு செய்த மறுநாளே,​​ பல்வேறு மாநிலங்களில்,​​ நிதியில்லை. மொத்த நிதிச்சுமையையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.இவ்வாறு குரல் கொடுத்திருப்பவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி,​​ பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார். இருவருமே ஒரே கருத்தை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு தனது திட்டத்தை மாநில அரசுகளின் நிதிநிலைமை குறித்து ஆலோசிக்காமல் அறிவித்திருக்கிறது என்று குறை கூறியுள்ளனர்.இதுபற்றி மாயாவதி குறிப்பிடுகையில்,​​ உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பதென்றால் ஆண்டுக்கு ரூ.18,000 கோடி தேவை. இதில் மாநில அரசின் பங்குத்தொகை ரூ.8,000 கோடியாக இருக்கும். 
மாநில அரசிடம் இந்த அளவுக்கு நிதி ஏது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பிகார் முதல்வர் நிதிஷ் குமார்,​​ நிதித் தட்டுப்பாடு குறித்துப் பேசினாலும் அவரது கவனம் வேறுதிசையில் அமைந்துள்ளது. அது ஆசிரியர் பற்றாக்குறை. மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல் படுத்த பிகார் மாநிலத்துக்கு கூடுதலாக 3.30 லட்சம் ஆசிரியர்கள் தேவை,​​ 1.8 லட்சம் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்று கூறியுள்ளார்.இவர்கள் சொல்வதை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது நியாயமான கோரிக்கைகளாகவே தோன்றும். ஆனால்,​​ அதில் நியாயமில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால்,​​ மத்திய அரசு இச்சட்டத்தை அமல்படுத்த ரூ.25000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அது மட்டுமன்றி தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ரூ.1.71 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிதி இச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தப் போதுமானதா,​​ இல்லையா என்பதில் வேண்டுமானால் கருத்துவேறுபாடு இருக்கலாமேயொழிய,​​ மத்திய அரசு நிதியே ஒதுக்கவில்லை என்பதைப் போல தோற்றத்தை ஏற்படுத்துவது சரியல்ல.இவர்கள் சொல்வது எந்த வகையிலும் நியாயமல்ல என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் முன்பாகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வ சிக்ஷ அபியான் (தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம்) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்து வருகிறது. சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் அடிப்படை நோக்கமே,​​ பள்ளியில் சேர முடியாமல் இருக்கும் 11 லட்சம் கிராமங்களைச் சேர்ந்த 19 கோடி சிறுவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருவதுதான். இந்தச் செயலை செய்து முடிக்கத்தான் இந்த நிதிஒதுக்கீடு. அதைக் கொண்டு,​​ பள்ளியில் கூடுதல் வகுப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருதல்,​​ பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி மற்றும் போதிய கல்வி உபகரணங்கள் வாங்குதல்,​​ ஆசிரியர் பற்றாக்குறை நிலவினால் ஆசிரியர்களைப் பணியமர்த்துதல் உள்ளிட்ட அனைத்தையும் செய்துகொள்ளத்தான் மாநில அரசுகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது.சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 2006-07ம் ஆண்டில் ரூ.2,066 கோடி,​​ 2007-08ம் ஆண்டில் ரூ.445 கோடி,​​ 2008-09ம் ஆண்டில் ரூ.1,517 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று,​​ பிகார் மாநிலத்திற்கு இதே காலக்கட்டத்தில் முறையே ரூ.1,077 கோடி,​​ ரூ.200 கோடி,​​ ரூ. 1,861 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிஒதுக்கீட்டை இந்த மாநில அரசுகள் என்ன செய்தன? எத்தனை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தின,​​ எத்தனை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டின,​​ எத்தனை பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும்,​​ புதிய ஆசிரியர்களை நியமித்தலும் நடந்தேறின? இந்தத் திட்டத்தின் நிதி சரியான முறையில் செலவழிக்கப்பட்டிருந்தால்,​​ மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தும் அளவுக்கு கூடுதல் வகுப்பறை,​​ பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உருவாகியிருக்க வேண்டுமே! பிறகு ஏன் இந்தப் புலம்பல்?பிகார்,​​ உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களைவிட அதிக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமே,​​ இங்குள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்காக தனியான கழிப்பறை வசதிகள் இல்லை என்பதாலேயே இடைநின்ற மாணவிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால்தான். இங்கே பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தத்தான் இந்த நிதி அளிக்கப்பட்டது. ஆனால்,​​ இந்த மாநிலங்களில் இந்த வசதிகளையாவது ஏற்படுத்தினார்களா?தமிழ்நாட்டுக்கும் ஏறக்குறைய ரூ.750 கோடி வரை மத்திய அரசினால் நிதி அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கும் அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் முன்ஆயத்தப் பணியாகவே சர்வ சிக்ஷ அபியான் திட்டம் அறிவிக்கப்பட்டு,​​ அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது இச்சட்டத்தை அமல்படுத்த நிதியில்லை என்று சொன்னால்,​​ கொடுத்த நிதியை என்ன செய்தீர்கள் என்று மத்திய அரசு கேள்வி கேட்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் சும்மா இருக்க வேண்டும்.மத்திய அரசுக்கு நன்றாகத் தெரியும். சர்வ சிக்ஷ அபியான் திட்டத்துக்காக அளித்த நிதி எந்த மாநிலத்திலும் முறையாகச் செலவழிக்கப்படவில்லை என்பதும்,​​ அவற்றின் பெரும்பகுதியைக் காகிதக் கணக்கில் மட்டுமே காட்டி,​​ ஆசிரியர்கள்,​​ அதிகாரிகள்,​​ அரசியல்வாதிகள் சாப்பிட்டுவிட்டார்கள் என்பதும்,​​ இருந்தாலும்,​​ பல்வேறு உள்ளாட்சிப் பொறுப்பு வகிக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் இதில் விதிவிலக்கு அல்ல என்பதும் மத்திய அரசுக்கு வெகு நன்றாகத் தெரியும். அதனால் பதிலடி கொடுக்காமல் இருக்கிறார்கள்.

-- 
S.முஹம்மது ஷாஃபி



0 comments :

Post a Comment