Labels:

தேசத்தின் தூண்கள்


சுமார் 65 ஆண்டுகளாக அழுது கொண்டே  இருக்கின்ற இந்திய தேசத்தின் அழுகுரல் உங்கள் காதுகளில் கேட்கின்றதா? எப்படி கேட்கும் ஆதிக்க வர்க்கத்தின் அடாவடி குரல்களுக்கிடையே தேசத்தின் அழுகுரல் எப்படி கேட்கும், அரசியல்வாதிகளின் அதிரும் குரல்களுக்கிடையே எப்படி அழுகுரல் கேட்கும்ஆரியவர்க்கத்தின் அராஜகத்திடையே அழுகுரல் எப்படி கேட்கும். இந்த தேசம் ஏன் அழுகிறது தெரியுமா? சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஏமாந்து விட்டோம் என்றுதான். அன்பார்ந்த மாணவ தோழர்களே! ஆங்கிலேய வர்க்கமும்ஆரிய வர்க்கமும் நம்மை அடக்குகிறது, கொஞ்சம் அடங்கித்தான் செல்லுங்கள் என்கிறார்கள் அரசியல் வாதிகள் . இந்த தேசம்  வளர்கிறது, ஒளிர்கிறது என்று அந்நியனுக்கு அடகு வைத்து கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்கள்.

அண்ணல் காந்தியின் அஹிம்சை வழி என்ற பெயரால் அண்ணா ஹசாரே போன்றோரின் அரசியல் நாடகமும் ஆங்காங்கே அரங்கேறிவருகிறது. ஊழலை ஒழிப்போம் என்று வீதிவீதியாக ஓலம் விட்டுவரும் ஊழல் வாதிகளின் ஒப்பாரிகளுக்கிடையே இந்த தேசத்தின் அழுகுரல் நம் செவிகளை எப்படி எட்டும்?

அரசியல் நாடகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள். அடையாளமே தெரியாத அளவிற்கு வாழ்நாள் முழுவதும்  அஸ்ஸாம், ஒரிசா, பீகார் போன்ற தேசத்தின் பல கிளைகளிலும் உள்ள பாமரர்கள் உண்ண உணவே கிடைக்காமல் இருக்கிறார்கள் உண்ணாவிரதம். இவர்களின் உண்ணாவிரதம் முடிவு பெறுவதில்லை நாம் ஒரு முடிவுக்கு வராது வரை.

அதோ! இந்திய ஏவுகணை விண்ணில் சீறி பாய்கிறது இங்கே கண்ணீர் ஆறு ஓடுகிறது வறுமை எனும் நோயால் இந்திய கிராமங்களில். இந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது நம் கால்கள் வீதி இறங்காத வரை. அணு உலை என்ற பெயரில் அளிக்க துடிக்கிறது அரசாங்கம் அழிவது அப்பாவிகள் தானே! வீட்டில் உலைவைக்காமல் உண்ணாநிலை இருக்கிறார்கள் அணு உலையை எதிர்த்து. ஆபத்தே இல்லை என்று மறுபடியும் ஏமாற்றுகிறார்கள் இந்த தேசத்தை. அநீதியும், அடக்குமுறையும் அரசின் கொள்கையாகவே மாறிவிட்டது போலும். ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் போது, நாம் காண முடிகிறது. அந்நிய வாணிபம் வரவும், உள்நாட்டு சில்லறை வாணிப சீரழிவும் மீண்டும் ஒரு சுதந்திரத்தை தேடி ஏங்குகிறது இந்த தேசம்.

மாணவ தோழர்களே!

இந்த தேசத்தை தாங்கி நிற்கும் தூண்கள் எல்லாம் தகர்ந்து கொண்டே செல்கின்றது. அநீதி, அநியாயம், லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரசியல் சூதாட்டம் என பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இந்த தருணத்தில் இந்த நாடு விழிகளை அகல விழித்து தேடுகிறது உணர்வுள்ள மாணவ சமூகத்தை. நீ உன்பார்வையை விசாலமாக்கு, சிந்தனையை சீராக்கு, இந்த தேசத்தை தாங்கி பிடிக்கும் தூணாக நீ மாற வேண்டும். உன் அறிவை கல்வி எனும் கட்டத்திற்குள் மட்டும் போட்டு விடாதே! அரசியல் போலிகளை விரட்டி உன் நிஜத்தை காட்டு. இனி இந்த நாடு உன்னை நம்பியே. உன் சிந்தனையும் செயலும் சிர்மையாக இருக்க வேண்டும். அநீதியும் அடக்கு முறையும் கண்டு அஞ்சுவது நாமல்ல. ஏனென்றால் நாம் தான் தேசத்தின் தூண்.
:- அன்வர்

0 comments :

Post a Comment