Labels:

காஷ்மீர் : மின்வெட்டை கண்டித்து போராடிய மக்களை சுட்டு கொன்ற ராணுவத்தின் கொலைவெறி!

 “தங்கள் பகுதிக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்” என்ற சாதாரணமான கோரிக்கையை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பொதுமக்கள் மீது, கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய தொழிற் பாதுகாப்புப் படை நடத்திய, துப்பாக்கிச் சூட்டில், அல்தாப் அகமது என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப்துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வேஸ் அகமது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடைந்தனர்.    இப்படுகொலை தொடர்பாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, கொல்லப்பட்ட அல்தாப் அகமதுவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கையோடு, “இந்த ஐந்து பேருக்கும் தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பேன்” என்றார்.    ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கருப்புச் சட்டம், தண்டனையை விட்டு ராணுவத்தை பாதுகாக்கிறது.  

இச்சட்டங்கள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை,  ஆள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிச் சூடு, என அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்களை காஷ்மீர் மக்களின் மீது ஏவிவிடும், ராணுவப் படை சிப்பாய்கள் மீது, காஷ்மீர் மாநில அரசு வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால் கூட,  அதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும், என்ற நிபந்தனை உள்ளது.  கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிவந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக், 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்ட, சிறுவர்களை அரசுப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன.  காஷ்மீரில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   காஷ்மீர் மாநில அரசு, இந்திய ராணுவப் படைகள் மீது 50 மனித உரிமை மீறல் கிரிமினல் வழக்குகளைத் தொடுத்து, அவற்றில் தொடர்புடைய சிப்பாய்கள்-அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கக் கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.  இந்த 50 வழக்குகளில் 31 வழக்குகள் பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்புடையவை;  11 வழக்குகள் சட்டவிரோதக் கைது, சித்திரவதை தொடர்பானவை.  இவ்வழக்குகள் குறித்து காஷ்மீர் மாநில போலீசு விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பதைக் கண்டுபிடித்து ஏற்றுக்கொண்டு, அதன்பிறகுதான் ராணுவத்தினரை விசாரிப்பதற்கு அனுமதி கோரியது.   பீர்வாஹ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரப்படுத்த முயன்ற ராணுவ மேஜரை விசாரிக்க அனுமதிக்க முடியாதென அறிவித்து விட்டது, மத்திய அரசு.   காஷ்மீரில் அரசுப் படைகள் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்திடம் மட்டும் 5,699 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  வழக்கு விசாரணையை சிவில் நீதிமன்றங்களில் நடத்த மத்திய அரசு சம்மதிக்காது.  உண்மையும் நீதியும், ராணுவ நீதிமன்றங்களில் புதைக்கப்படும்.  இந்த அநீதியைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில், காஷ்மீரிகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?
maruppu
 

0 comments :

Post a Comment