Labels:

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்!

சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார்.

மத்திய அரசின், பல்வேறு பணிகளுக்கான பணியாளர் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் பணிகளில் அமர்கின்றனர்.

கடந்தாண்டு வரை, இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகளை, ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய, இரு மொழிகளில் மட்டுமே, எழுத முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததை அடுத்து, மும்மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.

22ம் தேதி தேர்வு: இந்தத் திட்டம் இம்மாதம் 22ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தேர்வுகளில், முதலில் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, ஆணையத்தின் தென் மண்டலப் பிரிவுத் தலைவர் ரகுபதி கூறியதாவது: மாநில மொழிகளில் தேர்வு எழுத இயலாததால் சில மாநிலங்களில் இத்தேர்வுகளில் விண்ணப்பங்களே குறைந்த அளவில் வரத் துவங்கின. இந்தப் பிரச்சினை குறிப்பாக தென் மாநிலங்களில்தான் அதிகளவில் இருந்தது.

இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மும்மொழிகளில் தேர்வு எழுதும் திட்டத்தை அறிவித்தது. வரும் 22ம் தேதி நடக்க உள்ள தேர்வுகள் துவங்கி இனி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம். கடந்த, 2010-11 ஆண்டில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 970 விண்ணப்பங்களும், 2011-12ம் ஆண்டில், இரு மடங்கு அதிகரித்து ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு இம்முறை தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றுபவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். வேலைப் பாதுகாப்பு, ஐ.டி.,யை விட அதிகளவில் சம்பளம், உரிய தேர்வுகளை எழுதினால் பணி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் ஐ.டி.,யில் பணிபுரிவோர் மத்திய அரசுப் பணிகளை நாடி வரத் துவங்கியுள்ளனர். மேலும் இத்தேர்வுகளின் நடைமுறையையும் தற்போது மாற்றியுள்ளோம்.

முன்பெல்லாம் தேர்வுக்கான தகவல்களை மொண்ணை உரு தட்டி எழுத வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதெல்லாம் தேவையில்லை. அடிப்படையான பொது அறிவு, மொழி அறிவு இருந்தாலே ஒருவர் மத்திய பணியாளர் தேர்வுகளை எழுத முடியும். இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

பல மடங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த ரகுபதி, 'கடந்த காலங்களைப் பார்க்கும்போது, இம்முறை தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆறு மடங்கு அதிகளவில் வந்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான் என்றாலும்கூட, பிற மாநிலங்களை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார்.

0 comments :

Post a Comment