Labels:

ஆங்கில புரிதல் பிரச்சினையால் தற்கொலை செய்த மாணவன்


சென்னை: அண்ணா பல்கலைக்கழக எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு மாணவர் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்தாம் வகுப்பில 461 மதிப்பெண்களும், பிளஸ் 2 ல் 1159 மதிப்பெண்களும் பெற்றவர் இவர். அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் சேர்ந்த பின், பாடங்களைப் புரிந்து கொள்வதில், ஆங்கில மொழி அறிவுத்திறன் குறைவாக இருந்ததால், பின்தங்கினார்.
இது, அவரது தன்னம்பிக்கையை தளர்த்தி, மரணத்தை நோக்கி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், ஆங்கில மொழி அறிவு சிறப்பாக இருந்தால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது குறித்து, கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துக்கள்
பிரின்ஸ் கஜேந்திரபாபு - கல்வியாளர்: மொழி அறிவு என்பது இரண்டாம் பட்சம்தான். வ.செ.குழந்தைசாமி ஜெர்மனியில் கட்டுரை சமர்ப்பிக்கச் சென்றபோது, அவர்களின் தாய் மொழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். ஒரு வாரத்திற்குள் ஜெர்மானிய மொழியின் அடிப்படை இலக்கணத்தைக் கற்ற பிறகே அவர் கட்டுரை சமர்ப்பித்தார். பொற்கோ 40 வயதுக்குப் பிறகு தான் ஜப்பான் மொழி கற்றார். இன்று ஜப்பான் மொழியில் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். எனவே, மற்ற மொழிகளை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை முன்வைத்து சமூகம் கொடுக்கிற அழுத்தம் மிகக் கொடுமையானது.
தாய்மொழியில் படித்தால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் என்கிறது அறிவியல். அவ்வாறு இருக்கும்போது, பிற மொழியில் சரியாகப் படிக்கவில்லை என்று மாணவரைத் தூக்கில் தொங்க வைத்திருப்பதற்கு சமூகம் கொடுத்த அழுத்தமே காரணம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் தாய்மொழியிலேயே பாடம் இருப்பதை ஆங்கில மோகிகள் உணர வேண்டும்.
லியோ பெர்னாண்டோ - விரிவுரையாளர்: இதில் நான்கு அடுக்கு தவறுகள் நடந்துள்ளன. அந்த மாணவர், தன் குடும்பம், எதிர்காலம் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். அவருடன் படிக்கும் மாணவர்கள், அவரைத் தேற்றி இருக்க வேண்டும். அவருடைய ஆசிரியர் அவருக்குச் சரியான வழிகாட்டுதல் வழங்கி இருக்கலாம். அங்குள்ள மனநல ஆலோசனை மையத்தைச் சார்ந்தவர்கள் உதவி இருக்கலாம். இப்படி நான்கு தரப்பின் தோல்வியால் ஒரு மாணவரின் உயிர் பறிபோய் உள்ளது வருந்தத்தக்கது.
இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப உலகில், ஆங்கில அறிவு என்பது தவிர்க்க முடியாதது. தாய்மொழியில் பொறியியல் படிப்பை முடித்தால், தற்போதுள்ள நிலையில் வேலைக்குச் செல்வது குதிரைக் கொம்பு. பட்ட மேற்படிப்பில் தமிழ்வழிக்கல்வி என்பதை, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம். தொழில்நுட்பத் துறையில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சாதித்து வருவதற்கு, அவர்களின் ஆங்கில அறிவு முக்கியமான காரணம் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
அபிலாஷா - மனநல ஆலோசகர்: மாணவர்கள் வகுப்பறைகளில் மட்டும் இல்லாமல், வெளிப்புறங்களிலும் ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனால், தமிழ் வழியில் படித்த கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். தனிமையை நாடுகின்றனர். தனிமை விரக்திக்கு வழிவகுக்கிறது. விரக்தி விபரீதமான முடிவுக்கு கொண்டு செல்கிறது. இப்போதுள்ள மாணவர்கள், வாழ்வை மகிழ்ச்சியாகக் கொண்டாட நினைக்கிறார்கள். தங்கள் சக மாணவரின் துயரத்தில் பங்கெடுக்க விரும்புவதில்லை.தனிமையை நாடும் அல்லது தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள், மரணத்தை நோக்கிச் செல்கிறார்கள்.
இங்கு அவர்களின் அறிவை விட வயதே வேலை செய்கிறது. சரியான அறிவுரை மாணவருக்குக் கிடைத்திருந்தால், விபரீதமான முடிவை தவிர்த்திருப்பார். எனவே, ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் மனநல ஆலோசனை நிலையம் தவறாமல் இடம்பெற வேண்டும். ஆனால், அதுகுறித்து ஒவ்வொரு மாணவரின் மரணத்தின்போது மட்டுமே பேசி விட்டு பின்னர், அதை மறந்து விடுவது வெட்கக்கேடானது.

0 comments :

Post a Comment