Labels:

அணுத் தீமையற்ற தமிழக நாள் டிசம்பர் 21, 2013





தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் ''இந்தியாவை வல்லரசாக்கப் போகிறோம்' என்ற பெயரில் பெரும் தீங்கினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகச் செலவாகும், அணுக்கழிவை உருவாக்கும், ஆபத்துக்களை வரவழைக்கும் அணுசக்தி வேண்டாம் என்று உலக நாடுகளெல்லாம் மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்க முனைகின்றன. ஆனால் ஒரு பேருந்து நிலைய கழிப்பறையைக்கூட பேணத் தெரியாத நமது ஆட்சியாளர்கள் அணுமின் நிலையங்கள் அமைத்து அளவற்ற மின்சாரம் தயாரிக்கப் போகிறார்களாம்.
கூடங்குளம் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கங்களில் கொண்டு புதைப்போம் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தபோது, கர்நாடக மக்கள் கட்சி பேதமின்றி வெகுண்டெழுந்துப் போராடினர்.இதன் விளைவாக வெறும் மூன்று நாட்களில் கோலார் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தமிழகம் எதிர்கொள்ளும் அணுத் தீமைகளின் அட்டவணையைப் பாருங்கள்:


(1) கூடங்குளம் அணுமின் பூங்கா, கூடங்குளம், திருநெல்வேலி மாவட்டம்:
ரஷ்யாவின் உதவியோடு இந்தியாவிலேயே மிகப் பெரிய 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய இரண்டு அணுமின் நிலையங்களை கூடங்குளத்தில் கட்டியிருக்கிறார்கள். மேலும் நான்கு அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கான அரசச் சடங்குகளை முடித்து வைத்திருக்கிறார்கள். இன்னும் கூடுதலாக இரண்டு அசுர அணுமின் நிலையங்களையும், அணுக்கழிவு சுத்திகரிக்கும் ஆபத்தான ஆலை ஒன்றையும் இங்கே அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.உலகத்திலேயே உன்னதமான அணுஉலை என்று அரசு தரப்புச் சொன்னாலும், கூடங்குளம் அணுமின் நிலையம் முனகிக் கொண்டும் திணறிக்கொண்டும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ஒரு விபத்து நடந்தால் ரஷ்யா எந்தவித இழப்பீடும் தர வேண்டியதில்லை என்று 2008-ஆம் ஆண்டு ஓர் இரகசிய ஒப்பந்தமும் செய்து வைத்திருக்கிறது மத்திய அரசு. உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் பாதுகாப்புத் தொடர்பாக 15 பரிந்துரைகளைத் தெரிவித்தது. ஆனால் அவற்றைக் கடுகளவும் கருத்தில் கொள்ளாமலேயே மத்திய அரசும், அணுசக்தித் துறையும் கூடங்குளம் திட்டத்தை இயக்க எத்தனிக்கின்றன.


(2) கல்பாக்கம் அணுமின் பூங்கா, கல்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்:

கல்பாக்கத்தில் 220 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு அணு உலைகள், எரிபொருள் மறுசுழற்சி செய்யும் ஆலை (Reprocess Plant), அணுக்கழிவு சுத்திகரிக்கும் ஆலை (Waste Treatment Plant) இங்கே இயங்குகின்றன. இவற்றோடு இரண்டு அதிவேக ஈனுலைகள் (Prototype Fast Breeder Reactor-PFBR) அமைப்பதற்கான வேலைகள் 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டன. ஈனுலை என்பது தான் உட்கொள்ளும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உருவாக்குகிற திறன் கொண்டது. இவற்றைத் தவிர அணுக்கழிவுகளைச் செயலிழக்கச்செய்யும் ஆலை (Waste Immobilization Plant) ஒன்று 2013 நவம்பர் மாதம் இந்திய குடியரசுத் தலைவரால் வீடியோ கான்ஃப்ரன்சிங்க் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.கல்பாக்கத்துக்கு அருகே கடலில் எரிமலை ஒன்று இருப்பதாகவும், அதனால் கல்பாக்கம் அணுஉலைக்கு ஆபத்து வரலாம் என்ற செய்தியை முதலில் மறுத்த அணுசக்தித் துறை, தற்போது இதை ஆய்வு செய்வதற்கு நிதி ஒதுக்கியிருக்கிறது. கல்பாக்கம் பகுதியில் புற்றுநோய் எதுவுமே இல்லை என்று வாதிட்டுவந்த அணுசக்தித் துறை, 2012-ஆம் ஆண்டு அணுஉலை ஊழியர்கள் பலர் எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது.


(3) நியூட்ரினோ திட்டம், தேவாரம், தேனி மாவட்டம்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், தேவாரம் பொட்டிபுரம் கிராமத்துக்கு அருகேயுள்ள அம்பரப்பர் மலை எனப்படுகிற குன்றின் அடிப்பகுதியில் குகைகள் அமைத்து, நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு செய்யும் திட்டம் ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட எட்டு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்படவுள்ளன. இந்தத் திட்டம் 50 லட்சத்துக்கும் அதிகமான தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும். அந்தப் பகுதி விவசாயிகளையும், பயிர்களையும், கால்நடைகளையும், காட்டு உயிர்களையும் கதிர்வீச்சினால் அழிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையும், மலை சார்ந்த சூழலும், அப்பகுதி அணைகளும் ஆபத்துக்குள் தள்ளப்படும்.


(4) அணுக்கழிவு ஆய்வு மையம், வடபழஞ்சி, மதுரை மாவட்டம்:

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுக்கா வடபழஞ்சி கிராமத்தில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. முப்பது ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்கிறார்கள்.அணு உலைக்கழிவுகளை அழிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அழிப்பது குறித்துக் கண்டறிவதே மதுரையில் அமையவிருக்கும் மையத்தின் முக்கியப் பணி' என்று பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சுப்பிரமணியம், ''திட்டம் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்' என்கிறார் (தி இந்து, செப்டம்பர் 16, 2013).


(5) சிர்க்கோனியம் திட்டம் (Zirconium Project), பழையகாயல், தூத்துக்குடி மாவட்டம்:

சிர்க்கோனியம் எனும் வேதியல் பொருள் சிர்க்கோன் எனும் அரியவகை மணலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அணுமின் நிலையங்களுக்குத் தேவைப்படும் சிர்க்கோனியம் ஆக்ஸைட் மற்றும் சிர்க்கோனியம் உறிஞ்சி போன்றவைகளை தயாரிப்பதற்காக தொழிற்சாலைதான் தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் கிராமத்திலுள்ள சிர்க்கோனியம் திட்டம். இது 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கி வைக்கப்பட்டது.


(6) இந்திய அரும்மணல் நிலையம் (Indian Rare Earths Limited), மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டம்:

சிர்க்கோனியம் திட்டத்துக்குத் தேவையான சிர்கோன் மணல் இங்கே பிரித்தெடுக்கப்படுகிறது. மத்திய அரசு நிறுவனமான அரியவகை மணல் நிலையம் கன்னியாகுமரியிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அரியவகை மணல்கள் கொண்ட பகுதிகளிலிருந்து மணல் தோண்டி எடுக்கும் உரிமமும் பெற்றிருக்கிறது இந்த நிறுவனம். மணலைத் தோண்டி எடுப்பதோடு, தாது மணல்களைப் பிரித்தெடுக்கும் ஆலையும், சிர்கோனை மேம்படுத்தும் வேதியல் ஆலையும் இங்கே இயங்குகின்றன.

தமிழன் என்று சொல்லடா, தட்டிக்கேட்டு நில்லடா!
மேற்கண்ட அணுசக்தித் திட்டங்கள் அனைத்துமே தமிழர்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை மீறுகின்றன. நம்மை கடும் நோய் நொடிகளுக்குள் தள்ளுகின்றன. நமது வருங்காலத்தை, வரவிருக்கும் சந்ததிகளை அழிக்கின்றன. இந்தத் திட்டங்கள் பற்றிய முழு உண்மைகளை, முழுமையான தகவல்களை நமக்குத் தருவதில்லை.நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தமிழர்களே, உங்களின், உங்கள் குழந்தைகள்—பேரக்குழந்தைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு, எதிர்காலம் கேள்விக்குறியாவதை கவனிக்கிறீர்களா? தமிழகம் வளர வேண்டும், அதற்கு மின்சாரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இயற்கையை அழிக்காத, மக்கள் உடல்நலத்தைக் கெடுக்காத பல வழிகள் இருக்கும்போது, ஏன் ஆபத்தான அணுத் தீமைகளை எங்கள்மீது சுமத்துகிறீர்கள் என்றுதான் கேட்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமும், உங்களுக்கு ஏராளமான கமிஷனும் கிடைக்கும் என்பதற்காக, எங்களை பலிகடா ஆக்காதீர்கள் என்கிறோம். அணுத் தீமையற்ற தமிழகம் அமைத்திட விழைந்து நிற்கிறோம்.


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
தொடர்புக்கு:9677072050, 9842511589
3/5 தரை தளம், சுல்தான் தெரு, மண்ணடி, சென்னை-600001
E-mail : campusfronttn@gmail.com 

0 comments :

Post a Comment