கல்வித் தகவல்



ஐஓபி சார்பில் செல்போன் சர்வீஸ் இலவச பயிற்சி


தஞ்சாவூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் நடைபெறவுள்ள செல்போன் சர்வீஸ் இலவச பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் எம். ரவீந்திரன் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் பக்கிரிசாமி சாலை எண் 4-ல் இயங்கி வரும் ஐஓபி கிராமிய மையத்தில் வருகிற 27-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள 18 முதல் 36 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் மேற்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.பயிற்சிக்கு வருபவர்களுக்கு நாள்தோறும் பேருந்து கட்டணம், மதிய உணவு, தேவையான பயிற்சிக் கருவிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். தொடர்புக்கு 04362-242377.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி


சென்னை, செப். 17: ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் தமிழகத்திலிருந்து தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே இருக்கிறது. கிராமப் புற மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வேண்டும் என்ற ஆசை இருந்தும் முறையான வழிகாட்டுதலும், போதிய பொருளாதார வசதியும் இல்லாததால் தங்கள் லட்சியத்தை இழந்து வருகின்றனர். இதுபோன்ற ஏழ்மை நிலையில் உள்ளவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், தமிழகத்தின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், ஜெய்வின் என்ற இணையதள நிறுவனத்துடன் சேர்ந்து இந்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் முரளி. இலவச பயிற்சியில் சேர ஆன்லைன் தேர்வு: ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். இலவச பயிற்சியில் சேர விரும்புபவர்கள் முதலில் ஜெய்வின் இணையதள நிறுவனம் நடத்தும் மாதிரி ஆன்-லைன் தேர்வை எழுத வேண்டும். வரும் அக்டோபர் 2-ம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறுது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில் முதல் 50 இடங்கள் பிடிப்பவர்களே இந்த இலவச பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்வு எழுத உள்ளவர்கள் www.jeywin.com​  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30.

காவலர் உடல் திறன் தேர்வு


சென்னை: இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உடல் திறன் தேர்வுகள் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் நடக்கின்றன.இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காவல் துறை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்கள் தேர்வு தொடர்பாக கடந்த மாதம் 8ம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்று, அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றவர்களின் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தேர்வான சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகள் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், தர்மபுரி, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 14 மையங்களில் நடக்க உள்ளன. இதுதொடர்பாக அழைப்புக் கடிதம் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தனித்தனியாக அனுப்பப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தாளுநர், நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 24ம் தேதி கடைசி


சென்னை: ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள், வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை முதன்மை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப் படிப்பு மற்றும் நர்சிங் தெரபி இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புகள் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையால் நடத்தப்படுகிறது. இப்படிப்புகளில் சேர பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகள் சென்னை மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சல் மூலமோ சித்த மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற கடைசி நாள், இம்மாதம் 24ம் தேதி பிற்பகல் 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் விவரங்களை, " http:// www.tnhealth.org'  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

1 comments :

Post a Comment