Labels:

மனது : வலி நல்லது!

நீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா?
'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்!'
'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்?'
'எனக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் அப்பா-அம்மா?'
'என்னைப் புரிந்துகொள்ள ஏன் இந்த உலகத்தில் ஒருவர்கூட இல்லை?'
'என் எதிர்காலத்துக்கு எந்தவிதத்திலும் பயன் தராத விஷயங்களை ஏன் பள்ளியி லும் கல்லூரியிலும் நான் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்?'
'என்னை ஏன் இவ்வளவு அசிங்கமாகப் படைத்திருக்கிறான் இறைவன்?'
'நான் ஏன் நார்மலாக இல்லை?'
மூன்று கேள்விகளுக்கேனும் 'ஆம்' என்பது உங்கள் பதிலாக இருந்தால், சந்தேகமே வேண்டாம்... நீங்கள் நார்மலாகத்தான் இருக்கிறீர்கள்!
பதின் பருவத்தில் இப்படியான எண்ணங்கள் அலைக்கழிப்பதுதான் அந்தப் பருவத்தின் இயல் பான மனநிலை என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ். உலகின் 96 சதவிகித டீனேஜ் பருவத்தினர் தங்கள் தோற்றம், உடல் அமைப்பில் திருப்தியற்று இருக்கிறார்களாம். இதுபோலவேதான் நண்பர்கள், பெற்றோர்கள், காதலன்/காதலி ஆகியோருடனான உறவுகளையும் குழப்பிக்கொண்டு, எப்போதும் ஒருவித அவஸ்தை மனநிலையிலேயே இருக்கிறார் கள். அப்படியானவர்களுக்கு, தன் புத்தகம்மூலம் தோள் தட்டும் தோழனாக டிப்ஸ் தருகிறார் ஆண்ட்ரு. மிக எளிமையான ஆங்கிலம், குட்டிக் குட்டிப் படங்கள் மூலம் பெரிய உண்மைகளை எளிதில் புரியவைக்கிறார்.
வாழ்க்கை ஏன் கசக்கிறது?
உங்களையும் அறியாமல் நாக்கைக் கடித்துக் கொள்கிறீர்கள். வலிக்கிறது! கொதிக்கும் தேநீர் என்று தெரியாமல் ஒரு வாய் குடித்துவிடு கிறீர்கள். சுள்ளென்று சுடுகிறது. பென்சில் சீவும் போது, விரலை பிளேடு வெட்டிவிடுகிறது. ரத்தம் வெளியேறி எரிகிறது. இவை எல்லாம் உடலை வருத்தும் காயங்கள். அந்தக் காயங்கள் ஏற்படுத் தும் வலி, 'ஏதோ தப்பு. நீ செய்துகொண்டு இருக் கும் விஷயத்தை மேற்கொண்டு தொடராமல் இருப்பது நல்லது!' என்று உணர்த்தும் சமிக்ஞை. 
'வலி' என்ற ஒரு அலாரம் இல்லாவிட்டால், என்ன நடக்கும்? ரத்தம் வர வர... நாக்கைக் கடித்துக்கொண்டே இருப்பீர்கள். வாய் பொத்துப்போன பிறகும் அந்தத் தேநீரைக் குடித்துக்கொண்டே இருப்பீர்கள். ரத்தம் வழிந்த பிறகும் நிறுத்தாமல், பென்சிலை கூராக்கிக்கொண்டு இருப்பீர்கள். இதே லாஜிக்தான் மனதை வருத்தும் காயங்களுக்கும்!

உங்கள் மனதை ஏதோ ஒரு நடவடிக்கை அல்லது சம்பவம் வருத்துமானால், அதைத் தொடராதீர்கள். மேலும் மேலும் அதனால் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்கத்தான், அந்தச் சம்பவம் உங்கள் மனதில் ஒரு வலியை ஏற்படுத்துகிறது. பிறகு ஏன் அதைத் தொடர வேண்டும்? உள்ளுக்குள் சோகமாக உணர்ந்தால், நீங்கள் யோசிக்கும் விதத்தையே மாற்றிக்கொள்ளுங்கள். மற்றவர் மீது பொறாமைகொள்ளும்போதோ, கேலி கிண்டல் செய்து மற்றவரைக் காயப்படுத்தும்போதோ, நமது சந்தோஷத்துக்காக அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும்போதோ, பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போதோ... நமது மனது வலிக்கும். அலாரம் அடித்துவிட்டது. விழித்துக்கொள்ளுங்கள்!
படம் பார்த்து, பாடம் படிக்கலாமா?
'ஒருவன் நாயிடம் இருந்து தப்பிக்க முற்படுகிறான். அவனுடைய சட்டையின் நுனிப் பகுதியை நாய் கடித்து இழுத்திருக்கிறது. கோபமாக இருக்கும் அந்த நாய்க்கு வாலும் ஒரு காலும் வெள்ளை நிறம். ஒரு காது சிவப்பு நிறம். அவனுடைய சட்டையில் சிவப்பு மற்றும் வெள் ளைக் கோடுகள். ஒற்றைக் காலில் நிற்கிறான்அவன்!'
இதைப் படித்துக் கிரகித்து அந்தக் காட்சியைக் கற்பனை செய்ய உங்களுக்கு 20 நொடிகளேனும் பிடிக்கும். அதுவே, இந்தப் படத்தைப் பாருங்கள்...
சட்டென்று, பச்சக்கென்று மனதில் பதிந்துவிட்டதா? பல காலமாகச் சொல்லி வருவதுதான். வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு ஓவியம் அல்லது கார்ட்டூன் நம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடும்.
'20-07-1969 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் ஆளாகக் கால் பதித்தார்' என்று மனனம் செய்து மறந்துபோவதைக் காட்டிலும், இப்படி நீங்களாக ஒரு கார்ட்டுன் வரைந்தால்... எப்படி இருக்கும்?
அந்தத் தேதி உங்களுக்கு மறக்கவே மறக்காது!



ஏமாற்றங்களை ஏமாற்றுவது எப்படி?
எவ்வளவுதான் 'அலர்ட்' ஆக இருந்தாலும், பல சமயங்களில் எல்லோரும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். நமது முறை வரும்போது பஸ் பாஸ் கவுன்ட்டரில் 'உணவு இடைவேளை' என்று போர்டு விழுவது, அத்தனை பேர் தப்பும் தவறுமாகச் செய்து இருக்கும்போது நமது ரெக்கார்ட் நோட் குளறுபடிகளை மட்டும் புரொஃபஸர் கண்டுபிடித்துத் திட்டுவது, மனதுக்குப் பிடித்தவளிடம் காதலைச் சொன்னதும், 'என்னை உனக்குப் பிடிக்காதுன்னு நினைச்சேன். அதான் போன மாசம் அருண் புரபோஸ் பண்ணப்போ, 'ஓ.கே' சொல்லிட்டேன்!' என்று அவள் கண்ணைக் கசக்குவது. சிறிதும் பெரிதுமாகத் தினமும் நம்மை ஏமாற்றங்கள் கடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?
1. 'எனக்கு மட்டும் ஏன் இப்படி எப்போதும் கெட்டதாகவே நடக்கிறது?' என்று உள்ளுக்குள் புழுங்குவேன்! - இப்படி நினைத்து சுய பச்சாதாபத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம், அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான எந்த ஓர் உருப்படியான செயலிலும் உங்கள் மனம் கவனம் செலுத்தாது!
2. 'அது எனது தப்பு அல்ல!' என்று பழியை அடுத்தவர் மீது சுமத்துவதும் ஒரு விதத் தப்பிக்கும் மனோநிலைதான். அது உங்கள் தப்பாக இல்லாவிட்டாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தானே!
3. 'இதில் இருந்து நான் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?' என்று உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொண்டால்... சபாஷ்! இதுதான் மேற்கொண்டு அதுபோன்ற ஒரு தவறு நிகழாமல் தடுக்கும் மனோநிலை.


நமது ஒவ்வொரு ஏமாற்றமும், கல் மேல் விழும் உளி செதுக்கல் என்று நினைத்துக்கொண்டால், நம்மை நாமே செதுக்கி எடுக்கலாம். தண்டிக்கப்படுவதற்காக, நாம் இந்த உலகத்தில் அவதரிக்கவில்லை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்!

தேங்க்ஸ் : யூத்ஃபுல் விகடன் 
-- 

0 comments :

Post a Comment