தேசிய குழு கூட்டம்



பெங்களுரு, அக்டோபர் 28, 2013 : கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய குழு கூட்டம் அக்டோபர் 26 மற்றும் 27, 2013 ஆகிய இரு தினங்கள் பெங்களூருவில் உள்ள திராவிடர் அரங்கில், நம் தேசிய தலைவர் திரு. P. அப்துல் நாசர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நாடெங்கிலும் இருந்து தேசியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்:

கேம்பஸ் பிரான்ட் ஆப் இந்தியா துவங்கப்பட்ட தினமான நவம்பர் 7-ம் நாள் ஒவ்வோர் ஆண்டும் கேம்பஸ் டேஆக நாம் கொண்டாடி வருகிறோம். வருகின்ற நவம்பர் 7, கேம்பஸ் டே முதல், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11, நமது தேசிய கல்வி தினம் வரையிலான ஐந்து நாட்கள், நமது அரசுகளின் தவறான கல்வி கொள்கை குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மதவாத அரசியலை முறியடிப்போம்:

தனது சுயநலத்திற்காக மதங்களின் அடிப்படையில் மக்களிடையே பிளவினை உண்டாக்கும் போக்கினை BJP போன்ற அரசியல் கட்சிகள் கைகொள்வதை கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சமீபத்திய முஸ்லிம்களுக்கு எதிரான முசாபர் நகர் கலவரங்களும், பாபர் மசூதி இருந்த இடம் நோக்கிய பேரணிக்கு VHP அழைப்புக் கொடுத்ததும், அரசியல் லாபத்திற்காக மக்களிடையே பிளவுகளை உண்டாக்கும் செயல்களுக்கான உதாரணங்களாகும். காங்கிரஸ் அரசும் இதுபோன்ற சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இரட்டை வேடம் போடுகிறது. நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து இது போன்ற சமூக விரோதிகளின் பிரிவினை சதியை முறியடிக்க வேண்டும் என கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. 

வெளிநாட்டு பல்கலைகழகங்களை அனுமதிப்பது நம் நாட்டின் பொது கல்வி திட்டத்தை முடமாக்கும் செயல்:

கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு பல்கலைகழகங்களை நம்நாட்டின் அனுமதிப்பது தொடர்பான சட்டம் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் உள்ளது. நமது மத்திய மனிதவள அமைச்சகம் தற்பொழுது, வெளிநாட்டு பல்கலைகழகங்களை கல்வி நிறுவனங்களாக அல்லாமல் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956, பிரிவு 25ன் படி தொழில்துறையின் கீழ் தொழில் நிறுவனங்களாகஇயங்க அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. வெளிநாட்டு பல்கலைகழகங்களை நம் நாட்டில் அனுமதிப்பது மற்றும் இந்த வருடம் தில்லி பல்கலைகழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட FYUP திட்டம் போன்ற நம்நாட்டின் பொது கல்வி திட்டத்தை முடக்கும் செயல்களை கேம்பஸ் பிரான்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நமது கல்வி திட்டத்தை அமெரிக்க மயமாக்குதலை கைவிட்டுவிட்டு, நமது பொதுக்கல்வி திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு மனிதவள மேம்பாட்டுத்துறையை கேட்டுக்கொள்கிறது. 

மதகலவர தடுப்பு மசோதாவை உடனே நிறைவேற்று:

நாட்டில் மதவாத சக்திகள் பெருகுவதும் அதற்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதும் நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் பண்பாடு சீரழிவதற்கான அடையாளங்களாகும். நாட்டில் பெருகிவரும் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா கவலை கொள்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் UPA அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியான மதகலவர தடுப்பு மசோதாவை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறது. அரசியல் லாபத்திற்காகவும், ஒரு சில ஓட்டுகளுக்காகவும் பாசிச சக்திகள் கலவரம் புரிவது சமீபத்திய முசாபர் நகர் கலவரம் உட்பட பல இடங்களில் நாம் கண்டுள்ளோம். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதின் மூலம் எதிர்காலத்தில் கலவரங்கள் நிகழாமல் தடுக்க முடியும். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள்:

நாட்டில் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள் கவலை அளிப்பதாக உள்ளது. டெல்லி நிர்பயா கற்பழிப்பிற்கெதிரான மக்களின் போராட்டமும் சட்டத்தின் செயல்பாடுகளும் கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கெதிரான கொடுமைகளை குறைக்கவில்லை. நாகரீக வளர்ச்சி என்ற அடிப்படையில் இன்றைய ஊடகங்கள் ஒழுக்கநெறிகளை பாழ்படுத்துவதும் இதுபோன்ற தாக்குதல் நடைபெறுவதற்கு ஒர் காரணமாகும். இன்றைய இளம் தலைமுறையினரிடம் காணப்படும் மது, போதைவஸ்து , நடன விடுதிகள் மற்றும் சிகப்பழகு ஆகியவற்றின் மீதான மோகம் இதுபோன்ற வன்முறை நடைபெறுவதற்கான சூழலை அமைத்துக் கொடுக்கிறது. பள்ளிகளில் ஒழுக்ககல்வியை போதிப்பது தற்போதய காலத்தின் கட்டாயமாக உள்ளது. அரசாங்கம் சட்டங்களை சரியான முறையில் பிரயோகிப்பதும், இன்றைய பொழுதுபோக்கு ஊடகங்கள் இளம்தளையினரிடம் ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற தாக்கத்தை நெறிப்படுத்துவதும் இதுபோன்ற குற்றங்கள் குறைய உதவியாக இருக்கும். 

CHOGM மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்துகிறது. சிங்களர்கள் நிறைந்த இலங்கை ராணுவம், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் செய்த மாபெரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த ஓர் சட்டப்பூர்வ நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. மேலும் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையும் ராஜபக்சே அரசினால் மறுக்கப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில் இம்மாநாட்டில் இந்தியா பங்குபெறுவது, தமிழ் மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதாக கூறும் ராஜபக்சேவின் பொய்யான கூற்றுக்கு வலுசேர்ப்பதாக அமையும். இம்மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதின் மூலம் தமிழ் மக்கள் படும் துயரை உலகறியச் செய்தல் மட்டுமல்லாது இலங்கை ராஜபக்சே அரசிற்கு விடுக்கும் கடுமையான எச்சரிக்கையாகவும் அமையும்.


0 comments :

Post a Comment