தேசிய தலைவரின் மடல்


என் அன்பிற்கினிய தோழர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
நமது தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியா துவங்கப்பட்ட தினமான நவம்பர் 7-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் டே (Campus Day) வாக கொண்டாடுவதுடன், அது முதல் தேசிய கல்வி தினமான நவம்பர் 11-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களும் “National Education Campaign” எனப்படும் தேசிய கல்வி பிரச்சாரம்மேற்கொள்வதும் நாம் அறிந்ததே.

முழுமையான நல் வாழ்விற்கும், அவரவர் சார்ந்த துறை வளர்ச்சிக்கும் தேவையான கல்வி அறிவை பெறுவது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையாகும். அத்தகைய கல்வியை பெறுவது நாட்டின் ஒவ்வோர் குடிமகனுக்கும் உள்ள பிறப்புரிமையாகும்.
தன்னிலை உயர்வை அடைவதற்காக கல்வி பயில்வதற்கான சூழலை தன்னுடைய ஒவ்வோர் குடிமகனுக்கும் ஏற்படுத்திக் கொடுக்காதவரை எந்த ஒரு அரசும் தன் கடமையை நிறைவேற்றியதாக பறைசாற்ற முடியாது. அனைத்து குடிமக்களுக்கும் உயர்நிலை வரையிலான கல்வியளிப்பது அரசாங்கத்தின் மீதான கடமையாகும்.

நமது தேசத்தின் மாபெரும் தலைவர்களுள் ஒருவரும், நமது நாட்டின் முதலாம் கல்வி அமைச்சருமான திரு. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் கூற்றுகள் தாம் நாம் மேற்கண்ட வரிகள். மாபெரும் தொலைநோக்கு பார்வை கொண்ட, சிந்தனாவாதியான அவருடைய பிறந்த தினம் தான் நம் நாட்டின் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் அவருடைய வழிகாட்டுதல்களை நினைவு கூர்வதும், அவை செயல்வடிவம் பெறுவதை உறுதிப்படுத்துவதும் நம் மீதுள்ள கடமையாகும்.

திரு. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சுதந்திர இந்தியா மலர்ந்த தருணத்தில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஒரு சிறந்த பொதுக்கல்வி கொள்கையை நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். ஜனநாயக அடிப்படையிலான ஒரு வலிமையான கல்வித்திட்டத்தை வடிவமைக்க விரும்பினார். சாதி, மதம், வர்க்கம் மற்றும் வகுப்புவாத ஆதிக்கமற்ற ஓர் சமநிலை சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு அடித்தளமாக அக்கல்வி திட்டம் இருக்க வேண்டும் என்பதே அவரது சிந்தனையாகும். 
தொடக்கக் கல்வியின் மூலம் நாட்டு மக்களுக்கு எழுத்தறிவை அளிப்பது, மும்மொழி பயிற்றுவித்தல், அனைவருக்கும் கல்வி பயில்வதற்கான சம வாய்ப்புகள் அளிப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்ட வலிமையான ஒரு பொது கல்விக்கொள்கையை உருவாக்குவது அவரின் கனவாக இருந்தது. சுதந்திர இந்தியாவின் கல்வித் திட்டங்கள் அவருடைய கொள்கைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தால் இன்றைய பொதுக்கல்வி முறை இத்தகைய சீர்கேட்டை அடைந்திருக்காது. நமது அரசுகளின் தவறான கல்வி கொள்கைகளையும் அவற்றினால் விளையும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடமும், மாணவ சமூகத்திடமும் ஏற்படுத்துவதே நமது தேசிய கல்விப் பிரச்சாரத்தின்நோக்கமாகும். 

பல சமூகங்கள் கூடி வாழும் தேசமான இந்தியாவின் பள்ளிகள் சமத்துவம், நீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய பண்புகளை மாணவர்கள் மத்தியில் போதிக்க வேண்டும் என விரும்பினார் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள். காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருந்த சமூகத்திலும், சாதிய ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தின் மத்தியிலும் இக்கல்வியைக் கொண்டு ஒற்றுமையை நேசிக்கும், தேசத்தை வலிமையாக நிர்மாணிக்கும் குடிமக்களை உருவாக்க விரும்பினார். அனைத்து சமய நீதி போதனைகளும் கொண்ட பாடத்திட்டத்தினால் இவை சாத்தியப்படும் என்று நம்பினார். 

மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள், நம் நாடு அதனுடைய வருடாந்திர திட்ட மதிப்பீட்டில் (பட்ஜெட்டில்) 10% கல்விற்கான செலவினங்களாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியதாக ஆய்வு அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக ஓர் ஆண்டு மட்டுமே 6% ஒதுக்கப்பட்டதென்றும், சராசரியாக 2 முதல் 3 சதவீத நிதி மட்டுமே கல்வி செலவினங்களுக்காக ஒதுக்கப்படுவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண், பெண் பாகுபாடின்றி, சாதி மத பாகுபாடின்றி, கிராமம் மற்றும் நகரம் ஆகிய பாகுபாடின்றி மக்கள் அனைவருக்கும் தொடக்க கல்வி, உயர்நிலைக்கல்வி மற்றும் மேல்நிலை கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வண்ணம் நாடெங்கும் பாடசாலைகள் நிறுவுவதற்கென கல்வித்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதிகளில் பெரும் பகுதி செலவிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

மாறாக இன்றைய கல்விக்கூடங்கள், குறிப்பாக உயர் கல்விக்கூடங்கள், நகர்ப்புற மக்களும், உயர்குடியினரும் மேற்சாதியினர் மட்டுமே அணுகும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது. நாட்டில் சாதிப் பாகுபாடுகளையும், வர்க்க ஏற்றத்தாழ்வுகளையும், அதிகரிக்கும் வண்ணமே இன்றைய கல்வித்திட்டம் அமைந்துள்ளது எதார்த்தமாகும். நாட்டின் SC, ST, OBC, சிறுபான்மையினர், பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை உயர்கல்வி கூடங்களில் உறுதிப்படுத்தும் சட்டங்கள் இருந்தாலும், உண்மை நிலவரம் யாதெனில் இக்கல்விக் கூடங்களில் இவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. சட்டங்கள் ஏட்டில் இருந்தாலும் மறைமுகமான பல தடைகள் ஒடுக்கப்பட்டவர்கள் இதுபோன்ற கல்விக்கூடங்களில் பிரதிநிதித்துவம் குறைவதை உறுதி செய்கின்றன. 

இத்தகைய சூழலை சீர்படுத்தும் போராட்ட களத்தில் ஒன்றுபட்டு நின்றிட மாணவர்களையும், ஆசிரியர்களையும், சமூக ஆர்வலர்களையும் கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியா அழைக்கின்றது. பொதுக்கல்வித் திட்டத்தை காப்போம்” (SAVE PUBLIC EDUCATION) என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியா மேற்கொள்ள உள்ளது. கல்வித்துறையை மற்றுமோர் தொழில் துறையாக பாவிக்கும் தற்போதய UPA அரசாங்கத்தின் நவீன காலணி ஆதிக்க கொள்கைகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாக இப்பிரச்சாரம் அமையும். 

மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக அறிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அவரின் கல்விக் கொள்கைகளை காற்றில் பறக்க விடுவதும், அதற்கு மாறு செய்வதும் அனுமதிக்க இயலாத ஒன்றாகும். அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதை பரிசீலனை செய்வது, மக்களுக்கு இலவச கல்வியை உறுதி செய்யாத RTE எனப்படும் கல்வி உரிமை சட்டத்தை இயற்றியது, மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் உருவாக்கிய UGC மற்றும் AICTE ஆகியவற்றை கலைத்துவிட்டு NCHER என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு விளைவதும், நாட்டு மக்களுக்கு இலவச கல்வியை உறுதிசெய்யாத, கல்வியை வியாபார மயமாக்கும் மக்கள் விரோத கொள்கைகளின் உதாரனங்களாகும். 

கடந்த 2000-ம் ஆண்டு இந்திய பிரதமரிடம் சமர்பிக்ககப்பட்ட BAR எனப்படும் Birla Ambaani Committee அறிக்கை, கல்வித்துறையை பெருநிறுவனங்கள் லாபமீட்டும் வியாபாரத்துறையாக மாற்றுவதற்கான ஒர் திட்ட அறிக்கையாகும். அரசு இலவசமாக உயர்கல்வி அளிப்பதையும், கல்விக்கான திட்ட நிதி ஒதுக்கீட்டையும் கடுமையாக சாடும் இந்த அறிக்கை, கல்வித்திட்டமானது மனித நேயமற்ற, ஜனநாயக உணர்வற்ற, கேள்வி கேட்காத மனித கருவிகளை உருவாக்கும் விதமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது

கல்வி வியாபார மயமாக்கப்பட்டு அத்துறையில் பெரும் லாபமீட்டுவதும், அத்தகைய உயர் கல்வியின் மூலம் தன் நிறுவனங்களில் பணிபுரிய தன் உரிமைகளை அறியாத, சமூக அக்கறையற்ற, மனித கருவிகளை உருவாக்குவதுமே இவர்களின் எண்ணமாகும். 
இதுமட்டுமல்லாமல் பொது கல்வித்திட்டத்தின் தோல்வியானது நவீன காலணியாதிக்க சக்திகள் மற்றும் வகுப்புவாத பாசிச சக்திகளின் ஊடுருவலை அதிகரித்துவிட்டது. அரசு கல்வி நிறுவனங்களை விட தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவிட்டது. 1993-ம் ஆண்டு கிராமப்புற இந்தியாவில் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 10.1% ஆகவும், தனியார் நடுநிலைப்பள்ளிகளில் 7.9% ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 10.1% ஆகவும் இருந்த மாணவர் சேர்க்கை, 2006-ம் ஆண்டு முறையே 19.5% ஆகவும், 20.4% ஆகவும், 22.8% ஆகவும் உயர்ந்துள்ளது.

எண்ணிக்கையில் குறைந்த அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் குறைந்த தரம் உருவாக்கிய வெற்றிடத்தை நிரப்பும் விதமாக எண்ணற்ற இந்துத்துவா சிந்தனாவாதி பள்ளிகளும், மேற்கத்திய மிஸனரி பள்ளிகளும் பெருகியுள்ளன. நமது அரசியல் சட்டங்கள் உறுதியளிக்கும் அடிப்படை மத உரிமைகளை தங்களுடைய பள்ளிகளில் அனுமதிக்காத மதச் சகிப்புத்தன்மையற்ற இத்தகைய பள்ளிகள், ஹிந்துத்வா சிந்தனை மற்றும் இனப்படுகொலைகளின் ஆய்வுக் கூடங்களாகவும், நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் கூடங்களாகவும் உள்ளன. 

மக்களை விடுதலை அளிக்கக்கூடிய கல்வியின் இன்றைய நிலையாதெனில், கல்வியை பல சிறைகளில் இருந்து நாம் விடுவிக்க வேண்டிய பரிதாப சூழ்நிலையில் உள்ளது. The education which was supposed to liberate people is in a state to be liberated. தனியார் மயமாக்கல், வியாபார மயமாக்கல், மத அடிப்படைவாதம் ஆகிய சிறைகளில் இருந்து கல்வியை விடுவிக்க வேண்டி கல்விக் கூடத்திற்குள்ளும் வெளியும் மாணாக்கர்களையும் மக்களையும் அணி திரட்டி போராட வேண்டிய கடமை நம்முன் உள்ளது. கல்வியாளர்களாகவும் சமூக ஆர்வலர்களாகவும் வேடமிடும் சமூக விரோதிகளை எதிர்த்து இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களை போராட்டக்களத்தில் ஒன்றிணைக்க வேண்டும். பொதுக்கல்வித் திட்டத்தை சீரழிவிலிருந்து மீட்டு விடுதலை அளிக்கும் இப்போராட்டம் வீதிகளுக்கு எடுத்து வரப்பட்ட வேண்டும். நவீன காலணியாதிக்கவாதிகள் முறியடிக்கப்பட வேண்டும்.


இப்படிக்கு உங்கள் அன்புத் தோழன் 
P. அப்துல் நாசர்
தேசியத் தலைவர்
கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியா 
புது டெல்லி.


0 comments :

Post a Comment