Labels:

பெண்களுக்கான ஓர் அச்சமற்ற சமூகத்தை படைப்போம்

டிசம்பர் -10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கேம்பஸ்  ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் கையழுத்து பிரச்சாரம் நடைபெற்றது தமிழ் நாட்டில் நடைபெற்ற பிரச்சாரம் மாவட்ட வாரியாக கீழே புகைப்படங்களை காணலாம் 

தஞ்சை மாவட்டம் 
                                                          சென்னை மாவட்டம்
                                                             கோவை மாவட்டம்
                                                             கோவை மாவட்டம்
                                                              ஈரோடு மாவட்டம்
                                                            சென்னை மாவட்டம்
                                                                 மதுரை மாவட்டம்
                                                         கோவை மேற்கு மாவட்டம்
                                                             நெல்லை மாவட்டம்
                                                            நெல்லை மாவட்டம்
                                                              நெல்லை மாவட்டம்
                                                          நெல்லை மாவட்டம்
                                                          சென்னை மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் 

                                                                தேனி மாவட்டம்
                                                        தூத்துக்குடி மாவட்டம்


ஒரு தாயாக, மகளாக சகோதரியாக மனைவியாக ஒரு குடும்பத்தை கட்டமைப்பதோடு நின்றுவிடாமல், நல்லதொரு ஆசிரியை, மருத்துவர், விஞ்ஞானி, அரசியல்வாதி என்று அனைத்து தளங்களிலும் சேவையாற்றி இன்றைய தினம் நல்லதொரு சமூகத்தை கட்டமைப்பதிலும் சரிநிகர் பங்களிப்பை பெண்கள் அளிக்கின்றனர். சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் நாளாகிய இன்று, உலக மனித சமூகத்தின் சரி பங்கான பெண்களின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.

பெண் சமூகம் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, அனுதினமும் தங்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக, இழைக்கப்படும் உடல், மன ரீதியான கொடுமைகளுக்கு எதிராக போராடக்கூடிய இழிநிலையே நிலவுகிறது. நீதிக்கான அவர்களின் கூக்குரல்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இன்றும் பெரும்பாலான குடும்பங்கள் பெண் குழந்தைகளை நிராகரிக்கின்றன. ஆண் குழந்தைகள் குடும்ப கவுரமாகவும், தங்களின் எதிகாலத்திற்கு பாதுகாப்பு எனவும் பெற்றோர் கருதுகின்றனர். பிறந்த பச்சிளம் பெண்கள் புதைக்கப்படுவதும், சதி என்ற பெயரில் சிதைகளை எரிக்கும் விறகானதும் வரலாறுகளாகும். காலங்கள் மாறினாலும் அவலங்கள் மாறவில்லை. இன்றும் வீட்டு வேலைக்காரியாகவும், போகப்பொருளாகவும், தேவதாசிகளாகவும், கவர்ச்சி விளம்பரப் பொருளாகவும், அலுவலகங்களில், வியாபார தளங்களில், திரைப்படங்களில் கவரும் காட்சிப் பொருளாகவும் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். 

தங்களுடைய எதிர்காலத்தை தேர்வு செய்யும் உரிமை இல்லை, மாறாக அவர்களுடைய விதி ஆண்களின் கைகளில் உள்ளது. மேல்சாதியினரால் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் உடல், மனம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். போலி மதவாதிகளினாலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். 
இன்றைய தினம் நாம் ஒரு மேம்பட்ட நாகரிக சூழலில் வாழ்வதாக, சட்டத்தின் ஆட்சியில் சமூக அவலங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கபடுவதாக மார்தட்டிக் கொள்கிறோம். சமூகத்தில் சமத்துவமும் நீதியும் நிலைநிறுத்தப்படுவதாக உரக்க முழங்குகுகின்றோம். யதார்த்தம் என்னவெனில் ஒருசில உயர்குலப் பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதுகாப்பான சூழல் அமைகின்றது. அவர்களும் வன்முறை, கல்வியின்மை, வரதட்சணை, பெண் சிசுக்கொலை, பாலியல் வன்முறை, சாதிமத ஒடுக்குமுறை, கற்பழிப்பு, மூடநம்பிக்கை ஆகிய சமூக அவலங்களால் பாதிக்கப்படுகின்றனர். 
கடந்த முப்பது ஆண்டுகளில் நம்நாட்டில் நடைபெற்ற பெண்சிசுக் கொலைகளின் எண்ணிக்கை 10 கோடி ஆகும். இது உலகப்போரின் உயிர் இழப்புகளுக்கு இணையானதாகும். 

ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கின்றாள் என்று இந்திய தேசிய குற்றப்பதிவு கழகம் கூறுகின்றது. கடந்த ஆண்டு மட்டும் 2,44,270 பெண்களுக்கு எதிரான சிறு குற்றங்கள் பதிவாகி உள்ளன. 24,206 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த ஒரு வழக்கு பதியப்படுகின்றது. நூறில் ஒன்றோ இரண்டோ தான் வழக்குகளாக பதியப்படுகின்றது என்பது மேலும் வேதனைக்குரிய விசயமாகும். அறியாமை, மற்றும் அரசு இயந்தரங்களின் பாரபட்சம் மற்றும் அலட்சியத்தினால் பல வழக்குகள் பதியப்படுவதில்லை. 

இவ்விசயங்களில் கிராமம் நகரம் என்ற பாரபட்சமில்லை. மதக் கலவரங்களும், ஜாதி மோதல்களும், இனஒழிப்பு அவலங்களும் பெண்களை நிர்மூலமாக்குகின்றன. ஆட்சி அதிகாரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் ஹிந்துத்துவவாதிகளினால் குஜராத் வீதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டுக் கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக் கொல்லப்பட்ட நிகழ்வுகளை இந்த தேசம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதானிருந்தது. அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நமது பாதுகாப்பு படையினரால் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். இக்குற்றவாளிகள் AFSPA போன்ற கறுப்புச் சட்டங்கள் துணை கொண்டு தங்களை தற்காத்துக் கொள்வது அதனிலும் அவலம். 

மறுபுறம் பெண் விடுதலை என்ற பெயரில் பெண்கள் பெருநிறுவனங்களில் போகப்பொருளாகவும், காட்சிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். மேல்நாட்டு மோகம் இதுபோன்ற போலி பெண் விடுதலை கலாச்சாரதிற்கு நம் பெண்களை அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. 

தேசத் தலைநகரில் சகோதரி நிர்பயாவிற்கு நேர்ந்த அவலம், மணிப்பால் பல்கலைகழகத்தில் மாணவி கூட்டாக கற்பழிப்பு, கர்நாடகாவில் மாணவி சௌஜன்யா கற்பழித்து கொலை, திருச்சியில் பள்ளி மாணவி தௌபீக் சுல்தானா மர்மான முறையில் கொடூர மரணம், சமீபத்திய முன்னணி பத்திரிகை ஆசிரியர் மற்றும் நீதிபதியின் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆகியன பெண்சமூகம் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான ஓர் கொந்தளிப்பை இச்சமூகத்தில் ஏற்படுத்தியது. ஆனால் இந்த கொந்தளிப்பு மேலோட்டமாக செயல்படும் ஓர் வலி நிவாரணியாக இருக்கின்றதே தவிர சமூக அவலங்களின் மூல காரணங்களை வேரோடு களையும் தீர்வாக மாறவில்லை. இச்சமூக அவலங்கள் களையப்பட்டு சமூக மாற்றத்தை அவை ஏற்படுத்தவில்லை. 

சமமான கல்வி, பாதுகாப்பான பணி சூழல் மற்றும் அச்சமற்று தனியாக ஓர் பெண் பயணிக்கும் சமூக சூழலை உருவாக்குவதே நாம் விளைவிக்க விரும்பும் சமூக மாற்றம் ஆகும். பெண்களுக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுத்திப்படுத்தும் இச்சமூக மாற்றத்தை மெய்பிக்கும் வரை ஓயாத ஓர் போராட்டம் காலத்தின் தேவையாக உள்ளது. அத்தகைய சூழலை இந்நாட்டில் ஏற்படுத்தும் வரை நமது கால்கள் ஓய்ந்துவிடக்கூடாது. அதுவே நமது தேசத்தை செழிக்கச் செய்யும். 

அத்தகைய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் எங்களின் இந்தப் புரட்ச்சிப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ள அழைக்கின்றது 

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா. 
தமிழ்நாடு


0 comments :

Post a Comment